search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதாள சாக்கடை"

    • சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் நொறுங்கி கிடந்தது.
    • மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வார இறுதிவிடுமுறை நாட்களில் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கிழக்கு ராஜவீதி சாலை வழியாக சென்றுதான் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க முடியும். அதேபோல் பேருந்து நிலையம் வரும் அரசு பஸ்களும் அதே வழியாகத்தான் சென்று திரும்ப வேண்டும். ஒருவழி பாதை இல்லாததால் விடுமுறை நாட்களில் இந்த பிரதான சாலைகளில் எப்போதும் நெரிசலுடனே வாகனங்கள் ஊர்ந்து செல்லும். இந்த நிலையில் அப்பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் நொறுங்கி கிடந்தது. இதை விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் பகல் நேரத்தில் சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் போக்குவரத்து போலீசாரும் அங்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நீண்ட நேர வாகன நெரிசலுக்கு பின்னர் அந்த பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர். இதனால் மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • வீடுகளில் துர்நாற்றம் வீசுவதாக, குடியிருப்பு வாசிகள் பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மீத்தேன் வாயு, பாதாள சாக்கடையில் அதிக அழுத்தம் இருந்தால் வெளிவரும்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் சமீபத்தில் பாதாள சாக்கடை கழிவுநீரில் இருந்து விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் புதுவையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை செல்லும் பாதைகளை பொதுப்பணித் துறையினர் சுத்தம் செய்து புதிய 'மேன்ஹோல்'களை அமைத்தனர்.

    இந்த நிலையில், ரெட்டியார்பாளையம், கம்பன் நகர் பகுதியில் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதாக, நேற்று இரவு 7 மணிக்கு குடியிருப்பு வாசிகள் பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரச்செல்வன், உதவி பொறியாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த பகுதிக்கு விரைந்தனர்.

    கம்பன் நகர், 3-வது குறுக்கு தெரு முதல், 7-வது குறுக்கு தெரு வரை உள்ள குடியிருப்பு பகுதிகளில், சோதனையில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை செல்லும் மேன்ஹோல்களை திறந்து, வாயுக்களை அளவிடும் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் இருந்து மீத்தேன் வாயு வெளிவருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறியதாவது:-

    வீடுகளில் சமையல் கியாஸ் போன்ற வித்தியாசமான வாசனை வருவதாக தகவல் வந்தது. ஆய்வு செய்தபோது, மீத்தேன் வாயுவின் வாசனை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மீத்தேன் வாயு, பாதாள சாக்கடையில் அதிக அழுத்தம் இருந்தால் வெளிவரும்.

    அதனால், உயிருக்கு எந்த பாதிப்பும் வராது. இந்த வாயு குப்பைகள் மற்றும் சாக்கடைகள் மூலமும் வரக்கூடும். பொதுவாக ஹைட்ரஜன் சல்பேட், கார்பன் மோனக்சைடு வாயுவால் மட்டும் பாதிப்பு வரும். இப்போது குடியிருப்பு பகுதிகளில் அந்த வாயுக்கள் வெளிவரவில்லை.

    இது குறித்து பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம் என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
    • போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு பரவி வீடுகளில் இருந்த கழிவறைகளுக்கு சென்ற செந்தாமரை, காமாட்சி, செல்வராணி ஆகிய 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    3 பேர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்து நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்பினர் சட்ட சபை முன்பு இந்த பிரச்சினையில் கவனக்குறை வாக செயல் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சரிடம் இது தொடர்பாக மனு அளித்தனர்.

    இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகர் சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன் அங்கு வந்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையின் இரு புறமும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

    தகவல் அறிந்தரெட்டியார் பாளையம் போலீசார் மற்றும் வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.

    பாதாள சாக்கடை திட்டம் தேவை இல்லை

    அப்போது அவர்கள் இந்த பகுதியில் 300 குடும்பங்கள் உள்ளது. நாங்கள் உயிர்பயத்துடன் இருக்கிறோம். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எங்க ளுக்கு தேவை இல்லை.

    பாதாள சாக்கடை திட்டம் எங்கள் பகுதிக்கு தேவை இல்லை. இதனை ரத்து செய்ய வேண்டும். தற்போது கழிவறையில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினர். அப்போது அதிகாரிகள் இது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை 1 ½ மணிநேரம் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. * * * சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    • ராமநாதபுரம் நகராட்சி 22-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணிகளை நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் பார்வையிட்டார்.
    • பாதாள சாக்கடை பிரச்சனை படிப்படியாக சரி செய்யப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் நகராட்சிக் குட்பட்ட 22-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொண்டு சரி செய்யும் பணிகளை நகர சபை தலைவர் ஆர்.கே கார்மேகம் பார்வையிட்டார். அப்போது அவர் மாலைமலர் நிரு பருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின் படி ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் குறிப்பாக ராமநாத புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை பிரச்சனை தொடர்ந்து வருகிறது.இது சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகாரின் பேரில் அவ்வப்போது நானே நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். வார்டு கவுன் சிலர்களின் கோரிக்கை களை ஏற்றும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

    குறிப்பாக கடந்த கால ஆட்சியில் ஏற்பட்ட ஒரு சில குளறுபடிகளால் நகரின் பிரதான பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது.காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ மூலம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வு காண ஆவண செய்து வருகிறோம்.இதற்கிடையில் பொது மக்கள் நலன் கருதி அவர்கள் அளிக்கும் புகாரின் பேரில் நேரில் சென்று ஆய்வு செய்து தீர்வு கண்டு வருகிறோம்.பொதுமக்களுக்கான திராவிட மாடல் ஆட்சியில் ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை பிரச்சனை படிப்படியாக சரி செய்யப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகரில் 15 ஆண்டுகளாகியும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக முடியவில்லை.
    • சட்டமன்ற உறுதி மொழிக்குழு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் தனலட்சுமி, கமிஷனர் லீனாசைமன், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார்.

    அப்போது விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டத் திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்பட வில்லை. தற்போது பல இடங்களில் சாக்கடை நிரம்பி கழிவுகள் வெளியேறுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு கமிஷனர் லீனாசைமன் பதிலளித்து பேசுகையில், விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு 12 ஆயிரம் வீடுகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை வீடு களுக்கு இணைப்பு கொடுக்க வேண்டுமென்ற தகவல்கள் இல்லை. பெரும்பாலானோர் டெபாசிட் தொகை செலுத்தவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக முடியவில்லை. அண்மை யில் விருதுநகரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுதி மொழிக்குழு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதற்கான நட டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    கவுன்சிலர் ராமச்சந்திரன் பேசுகையில், எனது வார்டில் 73 வீட்டின் உரிமைதாரர்கள் டெபாசிட் தொகை கட்டி உள்ளனர். ஆனால் தற்போது வரை பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவில்லை. எனவே டெபாசிட் பணத்தை திருப்பி தரவேண்டும் என்றார்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் தற்போது வரை முடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதாள சாக்கடை பணி நடைபெற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மூடிகள் சாலையின் மட்டத்தை விட தாழ்வாக காணப்படுகிறது
    • பாதாள சாக்கடை மூடிகள் முதல் கட்டமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

    நாகர்கோவில் :நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைதிட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த பணிகள் தற்பொழுது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    பாதாள சாக்கடை பணி நடைபெற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மூடிகள் சாலையின் மட்டத்தை விட தாழ்வாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலையின் மட்டத்தை விட தாழ்வாக காணப்படும் மூடிகளை சீரமைக்க மேயர் மகேஷ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதையடுத்து நாகர்கோவில் முக்கிய சாலைகளில் உள்ள பாதாள சாக்கடை மூடிகள் முதல் கட்டமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாளசாக்கடை திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட மூடிகள் சாலையின் மட்டத்தை விட தாழ்வாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு அதை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூடிகளை குடிநீர் வடிகால் வாரியம் தான் சீரமைக்க வேண்டும்.

    ஆனால் பொது மக்கள் நலன் கருதி மாநகராட்சி சார்பில் சீரமைக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மூடிகளும் சீரமைக்கப்படும். மாநகரப் பகுதியில் 1500 பாதாளசாக்கடை மூடிகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    தெருவிளக்கு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் வரப்பட்ட நிலையில் அதை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்க ரூ. 14 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 14251 எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்ட உள்ளது.

    முதல் கட்டமாக 820 எல்.இ.டி.விளக்குகள் ரூ.71 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். 31 வார்டுகளில் இதற்கான பணி நடைபெற்று வருகிறது. கோர்ட் ரோட்டில் இன்று அந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    • ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை
    • சட்டபடி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் மாதிரி பள்ளி முதல்வர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலெக்டர் பேசியதாவது:-

    மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி 100 சதவிகிதமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியில் மாணவர்கள் கவணம் செலுத்தி நல்ல முறையில் படிக்க வேண்டும். கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்காக சேவை செய்யும் துறைகளில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் சத்துவாச்சாரி காந்தி நகர், மந்தை வெளி, சக்தி நகர், பூங்காநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார். அப்போது சாலையின் நடுவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களின் மூடிகள் சிலாப்கள் உடைந்து மக்கள் தவறி உள்ளே விழும் ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக ஒப்பந்ததாரரை வரவழைத்து எச்சரிக்கை செய்ததுடன், அந்த பணிகளை விரைந்து முடிக்கவில்லை என்றால் அவர் மீது வழக்குபதிவு செய்து சட்டபடியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விளாங்குடியில் சரியாக மூடாததால் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் 5 வயது சிறுவன் விழுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • காளவாசல்-தேனி பிரதான ரோட்டில் பாதாள சாக்கடை மூடிகள் பல மாதங்களாக சரிவர மூடப்படாமல் கிடக்கின்றன.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடைக்காகவும், குடிநீர் திட்ட பணிகளுக்காகவும் நன்றாக உள்ள சாலையை தோண்டுவதும், பின்னர் அதனை சரியாக மூடாமல் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் நகர் பகுதியில் 90 சதவீத சாலைகள் குண்டும் குழியு மாக காட்சியளிக்கின்றன.

    தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகள் மேலும் மோசம் அடைந்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வரு கின்றனர்.

    விளாங்குடி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவன் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:-

    மதுரை மாநகராட்சி பகுதியான 1-வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி கணபதி நகர் 2-வது தெரு அருகே உள்ள சக்தி நகர் துளசி வீதியில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டது.

    பணிகள் முடிந்த பின் வழக்கம்போல் ஊழியர்கள் அதனை சரியாக மூடாமல் அவசரக் கதியில் மண்ணை போட்டுவிட்டு சென்று விட்டனர். இதனை அதிகாரி களும் கண்டு கொள்ள வில்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் கடைக்கு சென்றுள்ளான். அப்போது சரியாக மூடப்படாத பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்தான். இதில் அவ னுக்கு காயம் ஏற்பட்டது. சில அடி பள்ளத்தில் சிறு வன் விழுந்ததால் யாருக்கும் உடனடியாக தெரியவில்லை. பள்ளத்தில் விழுந்த சிறுவன் அரை மணி நேரத்திற்கு மேலாக காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளான்.

    இந்த சத்தத்தை ஏதேச்சை யாக கேட்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பள்ளத்தை பார்த்தபோது சிறுவன் காயங்களுடன் கிடந்தது தெரியவந்தது. உடனே அப்பகுதி மக்கள் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டான். காயங்களுடன் அதிர்ச்சியு டன் காணப்பட்ட சிறுவனை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே மாநக ராட்சி அதிகாரிகள், ஊழி யர்களின் அலட்சியம் கார ணமாக சிறுவன் பள்ளத்தில் விழுந்த சம்பவம் அப்பகுதி யில் காட்டுத்தீ போல் பரவியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விளாங்குடி பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங் களை உடனடியாக சீரமைத்தும் புதிய சாலை அமைக்க வலியுறுத்தியும் திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதி யில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. போலீசாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

    காளவாசல்

    இதேபோல் காளவாசல்-தேனி பிரதான ரோட்டில் பாதாள சாக்கடை மூடிகள் பல மாதங்களாக சரிவர மூடப்படாமல் கிடக்கின்றன. இதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை பணிக்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சாக்கடை குழாய்கள் பதித்து பல ஆண்டுகளாகிவிட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி யில் 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படு கிறது. பாதாள சாக்கடையின் மொத்த நீளம் 63.40 கி.மீ.உள்ளது. நகர் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீரை வெளியேற்ற சிதம்பரம் பிள்ளை ஊருணி, சிங்காரத் தோப்பு, குண்டூருணி, நாக நாதபுரம், இந்திராநகர் ஆகிய 5 இடங்களில் கழிவு நீரை சேகரிக்க பம்பிங் நிலையங்கள் உள்ளன.

    இவற்றில் 4 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவு நீர் கடைசியாக இந்திரா நகர் பம்பிங் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, கழுவூரணி யில் சாலைக்குடியிருப்பு பகுதியில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யத்திற்கு கொண்டு செல்லப் படுகிறது.

    நகர் பகுதியில் மொத்த முள்ள 1200 மென்ஹோல் களில் பலவற்றில் மண் மேடாகவும், குழாய்கள் சேத மடைந்தும், அடைப்புகள் காரணமாகவும் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் சிரமப் படுகின்றனர். இதையடுத்து புதிய குழாய்கள் மாற்றவும், புதிதாக பம்ப்பிங் மோட்டார் கள், பேட்டரிகள் வாங்கவும் ரூ.11 கோடி நிதி ஒதுக்கப் பட்டு இதற்கான டெண்டர் நடக்கிறது.இதுகுறித்து நகராட்சி பொறியாளர் ரெங்கராஜன் கூறுகையில் ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை குழாய்கள் பதித்து பல ஆண்டுகளாகிவிட்டது. கழிவுநீர் மட்டுமின்றி மழை நீரும் புகுந்து விடுவதால் மென்ஹோல்கள் நிரம்பி பிரச்சினை ஏற்படுகிறது. நிரந்தரமாக பிரச்சினை உள்ள இடங்களை கண்டறிந் துள்ளோம். அவற்றை ரோபோ இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடக்கிறது. புதிதாக குழாய் மாற்றுவதற் கும், பம்பிங் நிலையங்களில் புதிய பேட்டரிகள், மோட் டார் வாங்கி மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்றார்.

    • பாதாள சாக்கடைகள் அடிக்கடி நிரம்பி சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
    • சாலைகளில் தேங்காதவாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக காளவாசல் உள்ளது. மதுரையில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் காளவாசல் சந்திப்பை கடந்தே தேனி மெயின் ரோடு வழியாக செல்ல வேண்டும். அந்த பகுதி முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் நிரம்பி இருக்கின்றன.

    மேலும் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம் மற்றும் கேரளா செல்லும் புறநகர் பஸ் களும் இங்கு நிறுத்தியே பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நெரிசலுடன் காணப்படும். இந்த நிலையில் காளவாசல் சந்திப்பு அருகில் தேனி மெயின் ரோடு பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகள் அடிக்கடி நிரம்பி கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் அவதியடைகின்றனர்.

    அவ்வப்போது பாதாள சாக்கடைகள் அடைப்பு நீக்கி சரி செய்யப்பட்டாலும் மீண்டும் நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. மதுரை மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் இந்த சாலை வழியாகத்தான் அடிக்கடி சென்று வருகின்றனர். இருப்பினும் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பஸ் நிறுத்ததிற்கு நடந்து செல்ல பயணிகள் சிரமப்படு கின்றனர்.

    மேலும் சாலை யோரத்தில் வாகனங்களை நிறுத்துபவர்களும், பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களும் மூக்கை பிடித்தப்படி செல்லும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து அந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளின் அடைப்பை முழுமையாக நீக்கி கழிவுநீர் சீராக செல்லவும், சாலைகளில் தேங்காதவாறும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • திடீரென மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
    • மழை நீரானது சாலையில் தேங்கி சேரும் சகதியுமாக மாறி உள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் மற்றும் மயிலம், பகுதியில் நேற்று இரவு 8 மணியில் இருந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை இன்று காலை 5 மணி வரையில் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திடீரென மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் இடியுடன் கூடிய பெய்த கனமழையால் பல்வேறு தாழ்வான இடங்களில் மழை நீரானது புகுந்தது.

    திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் மழை நீரானது சாலையில் தேங்கி சேரும் சகதியுமாக மாறி உள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 7787 வீடுகளுக்கு இணைப்பு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து 18 வார்டுகளில் முழுமையாகவும், 17 வார்டுகளில் பகுதி வாரியாகவும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.

    இதைத தொடர்ந்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க முதல்கட்டமாக ரூ. 8 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்கான தொடக்க விழா இன்று 27-வது வார்டுக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் பகுதியில் நடந்தது.

    விழாவில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு, வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி என்ஜினியர் பாலசுப்பிரமணியன், அதிகாரிகள் ராஜேஷ் குமார், தானப்பன், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர் கோபால சுப்பிரமணியன், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்பொழுது நிறைவடைந்த நிலையில் பாதாள சாக்கடைக்கான சுத்திகரிப்பு நிலையம் வலம்புரி விலை குப்பை கிடங்கில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீரை தெங்கம்புதூர் பகுதியில் விவசாயத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். வலம்புரி விலை குப்பை கிடங்கில் இருந்து தெங்கம்புதூர் பகுதிக்கு பைப் லைன் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லும் இடங்களை ஆய்வு செய்து பைப் லைன் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 8 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 7,879 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளை ஒரு வருட காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 7787 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட உள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கும் அதைத் தொடர்ந்து இணைப்புகள் வழங்கப்படும். வீடுகளுக்கான இணைப்பு கொடுக்கப்பட்ட பிறகு பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×